நவராத்திரி விரதம்

நவராத்திரி விரதம்

 http://thamiltheebam.blogspot.com


புரட்டாதி மாத சுக்லபக்ஷ பிரதமை முதல் நவமியீராக வரும் ஒன்பது நாட்கள் அனுஷ்டிக்கப்படும் இந்த அற்புதமான விரதம் தேவி விரதங்களுட் சிறந்த ஒன்றாகும். அமாவாசை தொடர்பின்றி அதிகாலையில் பிரதமை வியாபித்திருக்கும்  நாளே நவராத்திரி ஆரம்ப தினமாகும்.
முதல் மூன்று நாட்களும் வீரத்தை வேண்டி துர்க்கையை-பராசக்தியை வழிபடவேண்டும்.அடுத்த மூண்டு நாட்களும் செல்வத்தை வேண்டி மகாலக்ஷ்மியை வழிபடவேண்டும். இறுதி மூன்று நாட்களும் கல்வி, அறிவு, சகல கலைகளையும் ஞானத்தையும் வேண்டி சரஸ்வதி தேவியை வழிபடவேண்டும்.


விரதம் அனுஷ்டிக்கும் முறை

வீட்டிலே கும்பம் வைத்து சுவாமிபடங்களையும் மாட்டி அணையா விளக்கு ஏற்றி ஒன்பது நாட்களிலும் விதவிதமான பட்சணங்களை நைவேத்தியம் செய்து பூஜித்தல் முறை. முக்கியமாக அவல் , கடலை, என்பன நவராத்திரியில் அம்பிகைக்கு விசேஷ நிவேதனங்களாகும்.நாவற்பழம், கற்கண்டு முதலியனவும் வெற்றிலை, பாக்கு, பழவகை , தேங்காய் என்பனவும் படைக்கப்படும்.

நவராத்திரியில் ஒன்பது தினங்களும், ஒவொரு வித மலரல் தேவிக்கு மாலையிடுவர் . மல்லிகை, முல்லை, சம்பங்கி, ஜாதி, பாரியாதம், செம்பருத்தி, தாழம்பூ, ரோஜா, தாமரை, வில்வம், துளசி, மறுகு, கதிர்பச்சை, விபூதிப்பச்சை, சந்தன இலை, தும்பை இலை, பன்னீர் இலை, மருக்கொழுந்து மாலை முதலியனவும் சாத்துவர்.

நவராத்திரி விரதத்தை முறையாக கைக்கொள்ள விரும்புவோர் முதலெட்டு நாட்களிலும் பகலில் உணவின்றி இரவில் பூஜை முடித்தபின் பால்பழம், பலகாரம் என்பன சாப்பிட்டு நவமியில் உபவாசம் இருந்து பத்தாம் நாள்  விஜய தசமியன்று காலை எட்டரை மணிக்குமுன் பாரணைசெய்ய வேண்டும்.முடியாதவர்கள் முதலெட்டு நாளிலும் ஒரு நேர உணவுண்டு (பகல் அன்னம்) கடைசி நாளில் பால் பழம் மட்டும் கொள்ளலாம்.
விஜயதசமியன்று காலை அறுசுவை உண்டி சமைத்து அதனை நிவேதித்து விசேஷ பூஜை செய்தபின் நட்படிப்பு நட்கருமங்களை ஆரம்பித்த பின் பாரணை செய்வதே முறை. ஒன்பது வருடங்கள் தொடர்ந்து இவ்விரதம் அனுஷ்டித்தபின் விரதொத்யாபனம் செய்யலாம்.


கொலுவைத்தல்  


வீடுகளில் கொலுவைத்தல் நவராத்திரியின் விசேட அம்சமாகும்.படிப்படியாக அமைக்கப்பட்ட விஷேசமான பீடங்களில் அல்லது மாடிப்படிகளில் விதவிதமான பொம்மை எனப்படுகின்ற பல பதுமைகளை அழகாக அடுக்கி வைத்து அலங்கரித்து இக்கொலு அமைக்கப்படுகின்றது. 5,7 என ஒற்றைப்படையாக படிகளின் எண்ணிக்கை இருக்க வேண்டும். கர்ம சகுனமாக கீழ் உள்ள படிகளில் உலக வாழ்க்கைக்கு தேவையான பொருட்களை வைப்பார்கள்.நடுபகுதியில் ராஜ, ராணி, படைவீரர்கள் மக்கள் போன்ற பொம்மைகளை வைப்பார்கள்.மேற்பகுதியில் கலசமும், தெய்வங்களின் பொம்மைகளும் காணப்படும். சக்தியின் திருவருளை குறிப்பதே மேல் கலசம்.கீழே உள்ள மூன்று குணங்களையும் கடந்த பிறகே சக்தியின் திருவருள் கிடைக்கும் என்பதை இந்த அமுத கலசம் உணர்த்துகிறது.


நவராத்திரி தினங்களில் அம்பிகை அலங்காரம்

நவராத்திரியின் முதல் நாள் - மகேஸ்வரியாக மதுகைடபரை அளிக்க உருவம் எடுத்தாள். தேவி அபயம், வரதம், புஸ்தகம், அட்சயமாலை இவற்றுடன் அலங்கரிப்பர்.

நவராத்திரியின் இரண்டாம் நாள் - கெளமாரியாக தேவி மகிக்ஷாசுரனின் சேனைகளை கொல்லப்  புறப்பட்டாள். ராஜ ராஜேஸ்வரியாக கரும்பு,வில், மலரம்பு, பாசாங்குசம் ஆகியவற்றுடன் அலங்கரிப்பர்.

நவராத்திரியின் மூன்றாம் நாள் - வாரகியாக தேவியை சூலமும் கையுமாக எருமைமீது வீற்றிருப்பதை போன்று அலங்கரிப்பர்.

நவராத்திரியின் நான்காம் நாள் - மகாலட்சுமியாக துர்கையை ஜெயதுர்க்கையாக வழிபடுகின்றனர். துர்க்கை வெற்றி கோலத்தில் சிம்ம வாகனத்தில் அமர்ந்து, தேவர்களின் துதியை ஏற்றுக்கொள்வது போல காட்சி தருமாறு அலங்கரிப்பர்.

நவராத்திரியின் ஐந்தாம் நாள் -வைஷ்ணவியாக அமர்ந்த கோலத்தில் கம்பனின் தூதுவனாக, சுக்ரீவன் சொல்வதை கேட்டுக்கொண்டிருப்பதை போல அலங்காரம் செய்வர்.

நவராத்திரியின் ஆறாம் நாள்  - ஐந்திரியாக தூம்பரலோசனை அழிப்பதற்காக சண்டிகாதேவியாக சர்ப்ப ஆசனத்தில் அமர்ந்து கையில் அட்சர மாலையும், கபாலமும், தாமரை மலரும், போற்கலசமும் ஏந்தி பிறை அணிந்த கோலத்தில் அலங்கரிப்பர்.

நவராத்திரியின் ஏழாம் நாள் - பிரஹ்ம்மியாக தேவி, சண்டமுண்டர்களை வதம் செய்து சந்தோஷத்துடன் போட்பீடத்தில் அமர்ந்து ஒருபாதத்தை கீழே தாமரை மலரில் ஊன்றி, வீணை வாசித்துக்கொண்டிருக்கும் நிலையில் காட்சிதருமாறு அலங்கரிப்பர்.

நவராத்திரியின் எட்டாம் நாள் - நரசிம்ஹியாக தேவி கருணை மிகுந்த முகத்துடன் கரும்பு, வில்லுடன் காட்சி தருகிறாள்.

நவராத்திரியின் ஒன்பதாம் நாள் - சாமுண்டியாக தேவி கைகளில் வில், பாணம், அங்குசம், சூலம் இவற்றை ஏந்திய கோலத்துடன் சுபத்ரா தேவியாக காட்சி தருமாறு அலங்காரம் செய்வர்.

பத்தாவது நாள் - சிவனும் சக்தியும் கூடியிருப்பதால் எல்லா அனுக்கிரகமும் கிடைக்கும் வண்ணம் பத்தாவது நாள் சிவசக்தியாக அலங்கரிப்பர்.




ஒன்பது நாட்கள் செய்ய வேண்டிய நெய்வேத்தியங்கள்:

·         முதல்நாள் நெய்வேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
·         இரண்டாம் நாள் நெய்வேத்தியம்: தயிர்ச்சாதம்.
·         மூன்றாம் நாள் நெய்வேத்தியம்: வெண்பொங்கல்.
·         நான்காம் நாள் நெய்வேத்தியம்: எலுமிச்சை சாதம்.
·         ஐந்தாம் நாள் நெய்வேத்தியம்: புளியோதரை.
·         ஆறாம் நாள் நெய்வேத்தியம்: தேங்காய்ச்சாதம்.
·         ஏழாம் நாள் நெய்வேத்தியம்: கற்கண்டுச் சாதம்.
  எட்டாம் நாள் நெய்வேத்தியம்: சர்க்கரைப் பொங்கல்.
·         ஒன்பதாம் நாள் நெய்வேத்தியம்: அக்கர வடசல், சுண்டல்.



நவராத்திரி காலத்தில் செய்யக்கூடாதவை
  • நவராத்திரி காலத்தில் எண்ணெய் தேய்த்து முழுகுதல் விலக்கபட்டுள்ளது.
  • ஊசி நூல் கொண்டு பழந்துணி தைக்கக்கூடாது.
  • புரட்டாதி சனி விரதம் இந்த நாளினுள் வரும் பொது எண்ணெய் தேய்க்காது நீராடி அந்த விரதத்தையும் கைக்கொள்ளலாம். எண்ணெய் எரித்து வழிபடுதல் செய்யலாம்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக